أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: Al-Qamar السبت 01 يوليو 2017, 6:36 pm | |
| Al-Qamar அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [54:1] (இறுதி) நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து விட்டது. [54:2] எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், "இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்" என்றும் கூறுகிறார்கள். [54:3] அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர், மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும். [54:4] அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன. [54:5] நிறைவான ஞானம் உடையவை - ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை. [54:6] ஆகையால் (நபியே!) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும், (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்; [54:7] (தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக் கிளிகளைப் போல் வெளியேறுவார்கள். [54:8] அழைப்பவரிடம் விரைந்து வருவார்கள், "இது மிகவும் கஷ்டமான நாள்" என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள். [54:9] இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர், ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) 'பைத்தியக்காரர்' என்று கூறினர், அவர் விரட்டவும் பட்டார். [54:10] அப்போது அவர், "நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன், ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக!" என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார். [54:11] ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம். [54:12] மேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம், இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது. [54:13] அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம். [54:14] எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதற்காக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது. [54:15] நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? [54:16] ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?) [54:17] நிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? [54:18] 'ஆது' (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர், அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா?) [54:19] நிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம். [54:20] நிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்துறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது. [54:21] ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?) [54:22] நிச்சமயாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? [54:23] ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது. [54:24] நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம் என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர். [54:25] நம்மிடையே இருந்து இவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும், அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் (என்றும் அவர்கள் கூறினர்). [54:26] ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்? என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள். [54:27] அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம், ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக! [54:28] (அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது, "ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்" என்று அவர்களுக்கு அறிவித்து விடும். [54:29] ஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர், அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான். [54:30] என் (கட்டளையினால் பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (என்பதை கவனிக்க வேண்டாமா?) [54:31] நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர். [54:32] நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? [54:33] லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர். [54:34] லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம், விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம். [54:35] நம்மிடமிருந்துள்ள அருள் கொடையால் (இப்படிக் காப்பாற்றினோம்) இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கிறோம். [54:36] திட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்காலாயினர். [54:37] அன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள், ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். "என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்" (என்றும் கூறினோம்). [54:38] எனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது. [54:39] ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறினோம்). [54:40] நிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? [54:41] ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன. [54:42] ஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர், அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம். [54:43] (சென்று போன) அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களா? அல்லது, உங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா? [54:44] அல்லது (நபியே!) "நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்" என்று அவர்கள் கூறுகின்றார்களா? [54:45] அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். [54:46] அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும், மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையனதும் மிக்க கசப்பானதுமாகும். [54:47] நிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும் இருக்கின்றனர். [54:48] அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், "நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று அவர்களுக்கு கூறப்படும்). [54:49] நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம். [54:50] நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.
|
|
أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: رد: Al-Qamar السبت 01 يوليو 2017, 6:36 pm | |
| [54:51] (நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? [54:52] அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது. [54:53] சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும். [54:54] நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள் [54:55] உண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள். |
|