|
| An-Nahl | |
| | كاتب الموضوع | رسالة |
---|
أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: An-Nahl السبت 17 يونيو 2017, 4:45 pm | |
| An-Nahl அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். [16:1] அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டது அதைப்பற்றி நீங்கள் அவசரப்படாதீர்கள்; அவன் மிகவும் தூயவன் - அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிக்க மேலானவன். [16:2] அவன் மலக்குகளிடம் வஹீயைக் கொடுத்துத் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது (அனுப்பி வைத்து,) "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன், என்னைத்தவிர வேறுயாருமில்லை ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள்" என்ற கட்டளையுடன் (மலக்குகளை) இறக்கி வைக்கிறான். [16:3] அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்துள்ளான்; அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக்க மேலானவன். [16:4] அவன் மனிதனை இந்திரியத்துளியினால் படைத்தான்; அப்படியிருந்தும் மனிதன் பகிரங்கமான எதிரியாக இருக்கின்றான். [16:5] கால் நடைகளையும் அவனே படைத்தான்; அவற்றில் உங்களுக்குக் கத கதப்பு(ள்ள ஆடையணிகளு)ம் இன்னும் (பல) பலன்களும் இருக்கின்றன அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கவும் செய்கிறீர்கள். [16:6] அவற்றை நீங்கள் மாலை நேரத்தில் (வீட்டுக்குத்) திரும்பி ஓட்டி வரும் போதும், காலை நேரத்தில் (மேய்ச்சலுக்காக) அவிழ்த்துவிடும் போதும், அவற்றில் உங்களுக்கு(ப் பொலிவும்) அழகுமிருக்கிறது. [16:7] மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன். [16:8] இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். [16:9] இன்னும் நேர் வழிகாட்டுதல் அல்லாஹ்வின் மீதே இருக்கிறது (அவனருளை அடைய முடியாத) தவறான (பாதைகளும்) இருக்கின்றன மேலும், அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் நிச்சயமாக நேர்வழியில் சேர்த்துவிடுவான். [16:10] அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன. [16:11] அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவன்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் - நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது. [16:12] இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. [16:13] இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது. [16:14] நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். [16:15] உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்). [16:16] (வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்) நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள். [16:17] (அனைத்தையும்) படைக்கிறானே அவன், (எதையுமே) படைக்காத (நீங்கள் வணங்குப)வை போலாவானா? நீங்கள் (இதையேனும்) சிந்திக்க வேண்டாமா? [16:18] இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். [16:19] அன்றியும், அல்லாஹ் நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் அறிகிறான். [16:20] அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். [16:21] அவர்கள் இறந்தவர்களே உயிருள்ளவர்களல்லர் மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். [16:22] உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையே, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள். [16:23] சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை. [16:24] உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்? என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், "முன்னோர்களின் கட்டுக்கதைகள்" என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள். [16:25] கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்) இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?. [16:26] நிச்சயமாக, இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சிகள் செய்தார்கள்; அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டிடத்தை அடிப்படையோடு பெயர்த்து விட்டான்; ஆகவே அவர்களுக்கு மேலே இருந்து முகடு அவர்கள் மீது விழுந்தது அவர்கள் அறிந்து கொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது. [16:27] பின்னர், கியாம நாளில் அவன் அவர்களை இழிவு படுத்துவான்; "எவர்களை நீங்கள் எனக்கு இணையா(ன தெய்வங்களா)க்கி, அவர்களைப்பற்றி (முஃமின்களிடம்) பிணங்கிக் கொண்டிருந்தீர்களோ, அவர்கள் எங்கே?" என (அவர்களிடம்) கேட்பான்; எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டதோ அவர்கள்; "நிச்சயமாக இன்று இழிவும் வேதனையும் காஃபிர்கள் மீது தான்" என்று கூறுவார்கள். [16:28] அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்பவர்களாக இருக்கும் நிலையில், மலக்குகள் அவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுவார்கள்; அப்போது அவர்கள், "நாங்கள் எந்தவிதமான தீமையும் செய்யவில்லையே!" என்று (கீழ்படிந்தவர்களாக மலக்குகளிடம்) சமாதானம் கோருவார்கள்; "அவ்வாறில்லை! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்; (என்று மலக்குகள் பதிலளிப்பார்கள்.) [16:29] ஆகவே, நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து, அங்கே என்றென்றும் தங்கியிருங்கள் (என்றும் மலக்குகள் கூறுவார்கள்; ஆணவங் கொண்டு) பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது. [16:30] பயபக்தியுள்ளவர்களிடம், "உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?" என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டபோது "நன்மையையே (அருளினான்)" என்று அவர்கள் (பதில்) கூறுவார்கள். எவர் அழகான நன்மை புரிந்தார்களோ, அவர்களுக்கு இவ்வுலகிலும் அழகான நன்மையுண்டு இன்னும், மறுமை வீடானது (அவர்களுக்கு மிக) மேலானதாகவும் இருக்கும், பயபக்தியுடையவர்களுடைய வீடு நிச்சயமாக நேர்த்தியானது! [16:31] என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான். [16:32] (குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவருடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம்; "ஸலாமுன் அலைக்கும்' ("உங்கள் மீது சாந்தி உண்டாவதாக); நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) கருமங்களுக்காக சுவனபதியில் நுழையுங்கள்" என்று அம்மலக்குகள் சொல்வார்கள். [16:33] (ஆனால் அக்கிரமக்காரர்களோ) தங்களிடம் (உயிர்களைக் கைப்பற்றுவதற்காக) மலக்குகள் வருவதையோ, அல்லது உம் இறைவனுடைய (வேதனை தரும்) கட்டளை வருவதையோ தவிர வேறு எதை அவர்கள் எதிர் பார்க்கின்றனர்? இவர்களுக்கு முன்னிருந்தோரும் இவ்வாறே (அநியாயம்) செய்தார்கள்; இவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் எதுவும் செய்யவில்லை ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். [16:34] எனவே, அவர்கள் செய்து கொண்டிருந்த தீமைகளே அவர்களை வந்தடைந்தன் அன்றியும் எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது. [16:35] அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும், நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்கமாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவை யென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம் என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தைத்) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்புண்டா? (இல்லை). [16:36] மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். [16:37] (நபியே!) அவர்கள் நேர்வழி பெற்றிடவேண்டுமென்று நீர் பேராவல் கொண்ட போதிலும், அல்லாஹ் யாரை வழிதவற வைத்தானோ அத்தகையோரை நேர்வழியில் சேர்க்க மாட்டான் - இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோரும் எவருமில்லை. [16:38] இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை. [16:39] (இவ்வுலகில்) அவர்கள் எவ்விஷயத்தில் பிணங்கி(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அதை அவர்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவும், காஃபிர்கள் தாம் பொய்யர்களாக இருந்தார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் (அல்லாஹ் அவர்களை மறுமையில் உயிர்ப்பிப்பான்). [16:40] ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, 'உண்டாகுக!' என்பது தான். உடனே அது உண்டாகிவிடும். [16:41] கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்களோ, அவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது [16:42] இவர்கள் தாம் (துன்பங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொண்டு, தம் இறைவன் மீது முற்றிலும் சார்ந்து முழு நம்பிக்கை வைப்பவர்கள். [16:43] (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறெல்லர் ஆகவே (அவர்களை நோக்கி) "நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்" (என்று கூறுவீராக). [16:44] தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்; நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். [16:45] தீமையான சூழ்ச்சிகளைச் செய்யும் அவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ, அல்லது அவர்கள் அறியாப் புறத்திலிருந்து அவர்களை வேதனை வந்து அடையாதென்றோ அவர்கள் அச்சந்தீர்ந்து இருக்கின்றார்களா? [16:46] அல்லது அவர்களின் போக்குவரத்தின்போதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்க மாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா? அல்லாஹ் அவ்வாறு செய்தால் அவனை) அவர்கள் இயலாமலாக்க முடியாது. [16:47] அல்லது. அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்கமாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா?) நிச்சயமாக உங்கள் இறைவன் இரக்கமுடையவன்; பெருங் கிருபையுடையவன். [16:48] அல்லாஹ் படைத்திருக்கும் பொருட்களில் அவர்கள் எதையுமே (உற்றுப்) பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும், இடதுமாக (ஸுஜூது செய்தவையாகச்) சாய்கின்றன மேலும் அவை பணிந்து (கீழ்படிதலுடன் இவ்வாறு) அல்லாஹ் வழிபடுகின்றன. [16:49] வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - ஜீவராசிகளும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவாகள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பதில்லை. [16:50] அவர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனை பயப்படுகிறார்கள்; இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள். |
| | | أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: رد: An-Nahl السبت 17 يونيو 2017, 4:47 pm | |
| [16:51] இன்னும், அல்லாஹ் கூறுகின்றான்; இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள்; நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான்! என்னையே நீங்கள் அஞ்சங்கள். [16:52] வானங்களிலும், பூமியிலும் உள்ளவை(யெல்லாம்) அவனுக்கே (சொந்தமானவை) அவனுக்கே (என்றென்றும்) வழிபாடு உரியதாக இருக்கிறது (உண்மை இவ்வாறிருக்க) அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் அஞ்சகிறீர்கள்? [16:53] மேலும், எந்த நிஃமத் (பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும்; பின்னர் ஏதாவது ஒரு துன்பம் உங்களைத் தொட்டு விட்டால் அவனிடமே (அதை நீக்குமாறு பிரலாபித்து) நீங்கள் முறையிடுகிறீர்கள். [16:54] பின்னர் அவன் உங்களிடமிருந்து அத்துன்பத்தை நீக்கிவிட்டால், உடனே உங்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கே இணை வைக்கின்றனர். [16:55] நாம் அவர்களுக்கு அளித்துள்ளதை (நனிறியில்லாது) நிராகரிக்கும் வரையில் - ஆகவே (இம்மையில் சிலகாலம்) சகித்திருங்கள் - பின்னர் (விரைவிலேயே உங்கள் தவற்றை) அறிந்து கொள்வீர்கள். [16:56] இன்னும், அவர்கள் நாம் அவர்களுக்கு அளித்துள்ளதில் ஒரு பாகத்தைத் தாம் அறியாத (பொய் தெய்வங்களுக்காக) குறிப்பிட்டு வைக்கிறார்கள்; அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நீங்கள் இட்டுக் கட்டிக்கொண்டிருந்த (இவை) பற்றி நிச்சயமாக கேட்கப்படுவீர்கள். [16:57] மேலும், அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள்; அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மகா பரிசுத்தமானவன். ஆனால் அவர்கள் தங்களுக்காக விரும்புவதோ (ஆண் குழந்தைகள்). [16:58] அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான். [16:59] எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்) அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா? [16:60] எவர்கள் மறுமையின் மீது ஈமான் கொள்ளவில்லையோ அவர்களுக்கே கெட்ட தன்மை இருக்கிறது - அல்லாஹ்வுக்கு மிக உயர்ந்த தன்மை இருக்கிறது மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். [16:61] மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். [16:62] (இன்னும்) தாங்கள் விரும்பதவைகளை (பெண் மக்களை) அல்லாஹ்வுக்கு உண்டென்று (கற்பனையாக) ஏற்படுத்துகிறார்கள். நிச்சயமாகத் தங்களுக்கு (இதனால்) நன்மையே கிட்டுமென அவர்களுடைய நாவுகள் பொய்யுரைக்கின்றான் நிச்சயமாக அவர்களுக்கு (நரக) நெருப்புத் தான் இருக்கிறது இன்னும், நிச்சயமாக அவர்கள் அதில் முற்படுத்தப்படுவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை. [16:63] அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உமக்கு முன்னிருந்த வகுப்பார்களுக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம் - ஆனால் ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களையே அழகாக்கி வைத்தான் - ஆகவே இன்றைய தினம் அவர்களுக்கும் அவனே உற்ற தோழனாக இருக்கின்றான் - இதனால் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. [16:64] (நபியே!) அன்றியும், அவர்கள் எ(வ் விஷயத்)தில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம் மீது இவ்வேதத்தை இறக்கினோம்; இன்னும், ஈமான் கொண்டுள்ள மக்களுக்கு (இது) நேரான வழியாகவும், ரஹ்மத்தாகவும் (அருளாகவும்) இருக்கிறது. [16:65] இன்னும், அல்லாஹ் வானத்திலிருந்து மழையை பொழிய வைத்து, அதைக் கொண்டு உயிரிழந்த பூமியை உயிர் பெறச் செய்கிறான் - நிச்சயமாக செவியேற்கும் மக்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது. [16:66] நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். [16:67] பேரீச்சை, திராட்சை பழங்களிலிருந்து மதுவையும், நல்ல ஆகாரங்களையும் நீங்கள் உண்டாக்குகிறீர்கள்; நிச்சயமாக இதிலும் சிந்திக்கும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. [16:68] உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். "நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), [16:69] பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. [16:70] இன்னும்; உங்களைப்படைத்தவன் அல்லாஹ் தான், பின்னர் அவனே உங்களை மரிக்கச் செயகிறான்; கல்வியறிவு பெற்றிருந்தும் (பின்) எதுவுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், பேராற்றல் உடையவனாகவும் இருக்கின்றான். [16:71] அல்லாஹ் உங்களில் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேன்மையாக்கப்பட்டவர்கள்; தங்களுடைய செல்வத்தை தங்கள் வலக்கரங்களுக்கு உட்பட்டு(த் தம் ஆதிக்கத்தில்) இருப்பவர்களிடம் கொடுத்து, அவர்களும் இவர்கள் செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்கள் என்று ஆக்கிவிடுவதில்லை (அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடையையா? இவர்கள் மறுக்கின்றனர். [16:72] இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும்; பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; அப்படியிருந்தும், (தாமே கற்பனை செய்து கொண்ட) பொய்யானதின் மீது ஈமான் கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா? [16:73] வானங்களிலோ பூமியிலோ இவர்களுக்காக எந்த உணவையும் கைவசத்தில் வைத்திருக்காதவைகளையும் (அதற்கு) சக்திபெறாதவைகளையும் அல்லாஹ்வை விட்டுவிட்டு இவர்கள் வணங்குகிறார்கள். [16:74] ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள். [16:75] அல்லாஹ் (இருவரை) உதாரணம் கூறுகிறான்; பிறிதொருவனுக்கு உடமைக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் (அதிகார) உரிமை பெறாத ஓர் அடிமை மற்றொருவனோ, நம்மிடமிருந்து அவனுக்கு நல்ல உணவு(ம் மற்றும்) பொருள்களும் கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (நம் வழியில்) செலவு செய்கிறான். இவ்விருவரும் சமமாவாரா? அல்ஹம்து லில்லாஹ் (புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே) - என்றாலும் அவர்களில் பெரும் பாலோர் (இதனை) அறிந்து கொள்வதில்லை. [16:76] மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்; அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை) எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா? [16:77] மேலும், வானங்களிலும், பூமியிலும் உள்ள இரகசியம் அல்லாஹ்வுக்கே உரியது ஆகவே, (இறுதித் தீர்ப்புக்குரிய) வேலையின் விஷயம் இமை கொட்டி விழிப்பது போல் அல்லது (அதைவிட) சமீபத்தில் இல்லாமலில்லை; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான. [16:78] உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப்படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு - அவனே அமைத்தான். [16:79] வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. [16:80] அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித்தளமாக ஏற்படுத்தியுள்ளான்; உங்கள் பிரயாண நாட்களிலும் (ஊரில்) நீங்கள் தங்கும் நாட்களிலும் (பயன்படுத்த) உங்களுக்கு எளிதாக இருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் தோல்களிலிருந்தும் வீடுகளை உங்களுக்கு ஆக்கினான். வெள்ளாட்டின் உரோமங்கள் ஒட்டகையின் உரோமங்கள், செம்மறியாட்டின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்தும் உங்களுக்கு ஆடைகளையும் குறிப்பிட்ட காலம் வரை (அவற்றில்) சுகத்தையும் அமைத்துத் தந்திருக்கிறான். [16:81] இன்னும் அல்லாஹ் தான் படைத்துள்ளவற்றிலிருந்து உங்களுக்கு நிழல்களையும் ஏற்படுத்தினான்; மலைகளிலிருந்து உங்களுக்கு(த் தங்குமிடங்களாக) குகைகளையும் ஏற்படுத்தினான்; இன்னும் வெப்பத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கக்கூடிய சட்டைகளையும் உங்களுடைய போரில் உங்களை பாதுகாக்கக்கூடிய கவசங்களையும் உங்களுக்காக அமைத்தான்; நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பதாக, இவ்வாறு தன் அருட்கொடையை உங்களுக்குப் பூர்த்தியாக்கினான். [16:82] எனினும் இவர்கள் (உம்மைப்) புறக்கணித்துத் திரும்பிவிடுவார்களாயின், (நபியே! அதற்காகக் கவலைப்படாதீர்; ஏனெனில்) உம்மீது (கடமையு)ள்ளதெல்லாம் (இறை கட்டளைகளை அவர்களுக்குத்) தெளிவாகச் சேர்ப்பிப்பதுதான். [16:83] அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்கள் நன்றாக அறிகிறார்கள் பின்னர் அதனை அவர்கள் நிராகரிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் காஃபிர் (நன்றி கெட்டவர்)களாகவே இருக்கின்றனர். [16:84] ஒவ்வொரு சமூகத்தாரிலிருந்தும் ஒரு சாட்சியை நாம் எழுப்பும் (நாளை நினைவூட்டுவீராக அந்)நாளில் நிராகரிப்பவர்களுக்கு(ப் புகழ் கூறுவதற்கு) அனுமதி வழங்கப்படமாட்டாது (அல்லாஹ்வுக்குப் பொருத்தமானதை செய்து, அவ்வேளை தண்டனைக்குத் தப்பித்துக் கொள்ளவும்) இடங்கொடுக்கப்பட மாட்டாது. [16:85] அக்கிரமக்காரர்கள் (மறுமையில்) வேதனையைக் (கண்கூடாகப்) பார்க்கும்போது, (தம் வேதனையைக் குறைக்குமாறு எவ்வளவு வேண்டினாலும்) அவர்களுக்கு (வேதனை) இலேசாக்கவும் பட மாட்டாது அன்றியும் (அவ்வேதனை பெறுவதில்) அவர்கள் தாமதப்படுத்த படவும் மாட்டார்கள். [16:86] இன்னும், இணை வைத்தவர்கள் தாங்கள் இணைவைத்தவர்களை (மறுமை நாளில்) பார்த்தார்களாயின் "எங்கள் இறைவனே! நாங்கள் இணைவைத்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்தான். உன்னையன்றி நாங்கள் இவர்களைத் தான் அழைத்துக் கொண்டிருந்தோம்" என்று அவர்கள் கூறுவார்கள்; அதற்கு (அந்தத் தெய்வங்கள், "நாங்கள் தெய்வங்களல்ல) நிச்சயமாக, நீங்கள் பொய்யர்களோ" என்னும் சொல்லை அவர்கள் மீது வீசும். [16:87] இன்னும், அந்நாளில் அவர்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிவார்கள்; பின்னர் இவர்கள் இட்டுக் கட்டிக்கொண்டிருந்தவையெல்லாம் இவர்களை(க் கை) விட்டும் மறைந்து விடும். [16:88] எவர்கள் நிராகரித்துக் கொண்டும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துக்கொண்டும், இருந்தார்களோ அவர்களுக்கு - (பூமியில்) குழப்பம் உண்டாக்கிக் கொண்டிருந்ததற்காக - நாம் வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்திக்கொண்டே இருப்போம். [16:89] இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். [16:90] நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். [16:91] இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்; அல்லாஹ்வை சாட்சியாக வைத்துச் சத்தியம் செய்து, அதனை உறுதிப் படுத்திய பின்னர், அச்சத்தியத்தை முறிக்காதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான். [16:92] நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் இவ்விஷயத்தில் மதிகெட்ட) ஒரு பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள் - அவள் நூலை நூற்று நன்கு முறுக்கேற்றிய பிறகு, தானே அதைத் (தறித்து) துண்டு துண்டாக்கி விட்டாள்; ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத்தால் நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதனங்களாக்கிக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பதெல்லாம் இதன் மூலமாகத்தான். இன்னும் நீங்கள் எ(வ் விஷயத்)தில் பேதப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ, (அதனை) அவன் உங்களுக்கு கியாமநாளில் நிச்சயமாகத் தெளிவாக்குவான். [16:93] மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயத்தவராய் ஆக்கியிருப்பான்; என்றாலும் தான் நாடியவர்களை வழி கேட்டிலே விட்டு வைக்கிறான் - இன்னும் தான் நாடியவர்களை நேர் வழியில் சேர்ப்பான்; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக (மறுமையில்) நீங்கள் கேட்கப்படுவீர்கள். [16:94] நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் (சதி, துரோகம்) ஆகியவற்றுக்குக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு செய்வதால்) நிலை பெற்ற (உங்களுடைய) பாதம் சறுகி விடும்; அன்றியும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுத்துக்கொண்டிருந்த காரணத்தால், (இம்மையில் பெருந்) துன்பத்தை அனுபவிக்க நேரிடும்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. [16:95] இன்னும், அல்லாஹ்விடம் செய்து கொண்ட வாக்குறுதியை அற்ப விலைக்கு நீங்கள் விற்று விடாதீர்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், அல்லாஹ்விடம் இருப்பதுதான் உங்களுக்கு மிகவும் மேலானதாக இருக்கும். [16:96] உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்துவிடும். அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும் எவர்கள் பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். [16:97] ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். [16:98] மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக. [16:99] எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமுமில்லை. [16:100] திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அவனுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் (செல்லும்). |
| | | أحمد محمد لبن Ahmad.M.Lbn مؤسس ومدير المنتدى
عدد المساهمات : 52644 العمر : 72
| موضوع: رد: An-Nahl السبت 17 يونيو 2017, 4:48 pm | |
| [16:101] (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். [16:102] (நபியே!) "ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரயீல்) இதை இறக்கி வைத்தார்" என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக. [16:103] நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்) என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும். [16:104] நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பவில்லையோ, அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்; இன்னும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுமுண்டு. [16:105] நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். [16:106] எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. [16:107] ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே அதிகமாக நேசிக்கிறார்கள்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களின் கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான். [16:108] அத்தகையோருடைய இதயங்கள், செவிப்புலன், பார்வைகள் (ஆகியவற்றின்) மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள் தான் (தம் இறுதி பற்றி) பராமுக அலட்சியமாகயிருப்பவர்கள். [16:109] சந்தேகமின்றி, இவர்கள் மறுமையில் முற்றிலும் நஷ்டமடைவார்கள். [16:110] இன்னும் எவர்கள் (துன்பங்களுக்கும்) சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டபின் (தம் வீடுகளைத் துறந்து) ஹிஜ்ரத் செய்து (வெளிக்கிளம்பினார்களோ), பின்பு அறப்போர் புரிந்தார்களோ இன்னும் பொறுமையைக் கையாண்டார்களோ, அவர்களுக்கு (உதவி செய்ய) நிச்சயமாக உம்முடைய இறைவன் இருக்கின்றான்; இவற்றுக்குப் பின்னரும், உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். [16:111] ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். [16:112] மேலும், அல்லாஹ் ஓர் ஊரை (அவர்களுக்கு) உதாரணங் கூறுகிறான்; அது அச்சமில்லாதும், நிம்மதியுடனும் இருந்தது, அதன் உணவு(ம் மற்றும் வாழ்க்கை)ப் பொருட்கள் யாவும் ஒவ்வோரிடத்திலிருந்தும் ஏராளமாக வந்து கொண்டிருந்தன - ஆனால் (அவ்வூர்) அல்லாஹ்வின் அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் மாறு செய்தது ஆகவே, அவ்வூரார் செய்து கொண்டிருந்த (தீச்) செயல்களின் காரணமாக, அல்லாஹ் பசியையும் பயத்தையும் அவர்களுக்கு ஆடையாக (அணிவித்து அவற்றை) அனுபவிக்குமாறு செய்தான். [16:113] இன்னும், நிச்சயமாக அவர்களிடத்தில் அவர்களிலிருந்தே (இறை) தூதர் வந்தார் ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர்; ஆகவே, அவர்கள் அநியாயம் செயதவர்களாக இருக்கிற நிலையில் அவர்களை வேதனை பிடித்துக் கொண்டது. [16:114] (முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து ஹலாலான நல்லவற்றையே நீங்கள் புசியுங்கள்; நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள். [16:115] (நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம்; தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதொ அதுவுமேயாகும் ஆனால் எவரேனும் வரம்பை மீற வேண்டுமென்று (எண்ணம்) இல்லாமலும், பாவம் செய்யும் விருப்பமில்லாமலும் (எவராலும் அல்லது பசியின் கொடுமையாலும்) நிர்ப்பந்திக்கப்பட்டால் (அவர் மீது குற்றமில்லை); நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். [16:116] உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலானது, இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் - நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பெய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். [16:117] (இத்தகைய பொய்யர்கள் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம் தான்; (மறுமையிலோ) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. [16:118] இன்னும் யூதர்களுக்கு, உமக்கு நாம் முன்னரே விளக்கியுள்ளவற்றைத் தடுத்து விட்டோம்; (எனினும்) நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை ஆனால் அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். [16:119] பிறகு, நிச்சயமாக உம் இறைவன் எவர்கள் அறியாமையினால் தீமை செய்து பின்பு (அவற்றிலிருந்து விலகி) தவ்பா செய்து தங்களைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (மன்னிப்பளிப்பவன்) நிச்சயமாக அதன் பின்பும் உம் இறைவன் பிழை பொறுப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். [16:120] நிச்சயமாக இப்றாஹீம் ஒரு வழிகாட்டியாகவும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும் (நேரான பாதையில்) சார்ந்தவராகவும் இருந்தார் மேலும், அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை. [16:121] (அன்றியும்) அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக அவர் இருந்தார்; அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இன்னும் அவரை நேர் வழியில் செலுத்தினான். [16:122] மேலும் நாம் அவருக்கு இவ்வுலகத்தில் அழகானவற்றையே கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையிலும் அவர் ஸாலிஹானவர்களில் (நல்லவர்களில் ஒருவராக) இருப்பார். [16:123] (நபியே!) பின்னர் "நேர்மையாளரான இப்றாஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்" என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை. [16:124] சனிக்கிழமை (ஓய்வு நாள்) என்று ஏற்படுத்திய தெல்லாம், அதைப்பற்றி எவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அவர்களுக்குத்தான் - நிச்சயமாக உம் இறைவன் கியாம நாளில் அவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தவை பற்றி அவர்களுக்கிடையே தீர்ப்புச் செய்வான். [16:125] (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். [16:126] (முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும். [16:127] (நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம் - அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை பற்றி நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடவேண்டாம். [16:128] நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ, அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான். |
| | | | An-Nahl | |
|
| صلاحيات هذا المنتدى: | لاتستطيع الرد على المواضيع في هذا المنتدى
| |
| |
| |